ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சம பலம் வாய்ந்த சென்னை - மும்பை அணிகள் மோதின. பரப்பரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில், 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடர்களில் அந்த அணி 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு அதிக ரன்கள் குவித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான டேவிட் வார்னர் கைப்பற்றினார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய அவர் 12 போட்டிகளில் 692 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சதம், 8 அரைசதங்கள் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவரே பெற்றுள்ளார்.
இதேபோன்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை சென்னை அணியின் இம்ரான் தாஹிர் தட்டிச்சென்றார். இந்த சீசனின் ஆரம்பம் முதல் சிறப்பாக பந்துவீசி வந்த அவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை அணியின் பந்துவீச்சில் முக்கிய பங்காற்றினார்.
முன்னதாக அதிக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் டெல்லி அணியின் ரபாடா இருந்து வந்தார். அவர் வெறும் 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தபோது, காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற நேரிட்டது. இதனால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது அந்த மகுடத்தை சூடியுள்ளார். தாஹிர் 17 போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுதவிர மிக அதிக வயதில்(40) இந்த விருதை வெல்லும் வீரர் என்ற சாதனையையும் தாஹிர் படைத்துள்ளார்.