தென்னாப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின். 35 வயதான இவர் 2016ஆம் ஆண்டில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால் இரண்டு வருடங்களாக கிரிக்கெட் விளையாடமல் இருந்தார்.
இதன் விளைவாக 2017, 2018, 2019 என தொடர்ந்து, மூன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இதைத்தொடர்ந்து, நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் நாதன் குல்டர் நைல் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக ஸ்டெயின் அணியில் தேர்வானார்.
இதில், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளுக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற இவர் முக்கிய பங்கு விகித்தார். இரண்டு போட்டிகளில் இவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில், குறிப்பாக சென்னை வீரர் ரெய்னாவை ஸ்டெயின் போல்ட் ஆக்கியது அவரது ரசிகர்களால் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஓன்று.
இந்நிலையில், ஸ்டெயின் தோள்பட்டையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். இதனால், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர் பங்கேற்பாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக, தென்னாப்பிரிக்கா அணி மே 19ஆம் தேதி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கு முன்னதாக, ஸ்டெயினை முழு உடற்தகுதி பெற வேண்டியது எங்களுக்கு முக்கியம் என தென்னாப்பிரிக்கா அணியின் மருத்துவர் கூறியுள்ளார்.
ஒருவேளை, ஸ்டெயின் காயத்தில் இருந்து மீளமுடியாமல் போனால் அவரது ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.