இன்று நடைபெறவுள்ளஐபிஎல் தொடரின் மற்றொரு ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ராஜஸ்தான் அணியில், பேட்டிங் சரியாக இருந்தும் இந்த தொடரில் அவர்கள் ஆடிய இரண்டுப் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளார்கள்.அந்த அணியில் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல பவுலர்கள் இல்லாததுதான்இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மன்கட் முறையில் பஞ்சாப் அணியுடனும், வார்னர், விஜய் சங்கரின் அதிரடியால் ஹைதராபாத் அணியுடனும் ராஜஸ்தான் அணி வீழ்ந்துள்ளது. இன்றையப்போட்டிசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி, தாமஸ் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மறுமுனையில், சென்னை அணி இதுவரை ஆடிய இரண்டுப் போட்டிகளிலும் அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்குர், பிராவோ, வாட்சன், தீபக் சஹார், கேதர் ஜாதவ், ஜடேஜா என அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளது தோனிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.கோலி, டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அடங்கிய பெங்களூரு அணியை இவர்கள் 70 ரன்களுக்கு சுருட்டினர்.
அதைத்தொடர்ந்து, ரிஷப் பந்த், பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இந்திய இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணியையும் இவர்கள் 147 ரன்களை மட்டுமே எடுக்கச் செய்தனர்.
இதனால், ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் என ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் ஒரு கை பார்ப்பார்கள் என கூறப்படுகிறது. அதேசமயம், ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், இன்றைய போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஹைதராபாத் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி 4 மணிக்கு நடைபெறும் நிலையில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.