மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பயிற்சியின்போது காயமடைந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றையப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார்.
இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே பொல்லார்ட் மும்பை அணியில் எவ்வாறு நீடிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 197 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்தையும் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சரமாரியாக பவுண்டரிக்கு விரட்டினர்.
இதனையடுத்து 198 ரன்கள் என்ற இமாலய இலக்கினை விரட்டிய மும்பை அணி தொடர்ந்து முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கேப்டன் பொல்லார்ட் களமிறங்க, ஆட்டம் பரபரப்பானது. கேப்டனாக களமிறங்கியுள்ள முதல் போட்டியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்னும் வைராக்கியத்துடன் பொல்லார்ட் அதிரடியில் பின்னி பெடலெடுத்தார்.
22 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து விளையாடி வருகையில், மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் சூறாவளியாய் சுழட்டி இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை பறக்கவிட அந்த ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஜ்புட் வீசிய பந்து நோ-பாலில் சிக்சர் அடிக்க, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த வீசிய பந்தை பொல்லார்ட் சிக்சராக அடிக்க ஆசைப்பட்டு பவுண்டரி லைனில் மில்லர் கேட்ச் பிடித்தார். இதனையடுத்தி கடைசி பந்தில் அல்ஸாரி ஜோசப் இரண்டு ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றிபெற வைத்தார்.
போட்டிக்கு முன்னதாக பல விமர்சனங்களை வீசிய ரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் பொல்லார்ட்டை புகழ்ந்து இணையத்தில் பதிவிட ஆரம்பித்தனர். அதன் பின்னர் கேப்டனாக பெற்ற முதல் வெற்றியை தனது மகன் பிறந்தநாளுக்கு அர்ப்பணிப்பதாக பேசி ரசிகர்களை நெகிழ்வடைய வைத்தார்.