ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில், கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இந்தியாவின் சைனாமேன் என்றழைக்கப்படும் கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவிற்கு இப்போட்டி மறக்க வேண்டிய போட்டியாக அமைந்துள்ளது. குல்தீப் யாதவ் வீசிய 16ஆவது ஓவரை,எதிர்கொண்ட பெங்களூரு ஆல்ரவுண்டர் மொயின் அலி முதல் ஐந்து பந்துகளில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 26 ரன்களை சேர்த்தார்.
பின் இறுதி ஓவரில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இதனிடையே இந்த ஓவரில் குல்தீப் யாதவ் ஒரு அகல பந்தையும் வீசினார். முதல் மூன்று ஓவர்களில் 32 ரன்களை வழங்கிய அவர், கடைசி ஓவரில் 27 ரன்களை வழங்கியதன் மூலம் 4 ஓவர்களில் 59 ரன்களை அள்ளித்தந்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்களை வழங்கிய இரண்டாவது கொல்கத்தா வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார்.
தனது கடைசி ஓவரில் 27 ரன்களை வழங்கியதை நினைத்து மனம் உடைந்த போன அவர், மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார். இதைப் பார்த்த ரஸல், நிதிஷ் ராணா ஆகியோர் அவரை அரவணைத்தனர்.
அவர் கண் கலங்கிய புகைப்படம் இணையதளத்தில் வெளியானதைக் கண்ட அவரது ரசிகர்கள் சோகக்கடலில் மூழ்கினர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள குல்தீப் யாதவ், அடுத்த போட்டியில் கம்பேக் தருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.