மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலானப் போட்டியின் கடைசி ஓவரை வீசிய மலிங்கா அதை நோ-பாலாக வீசினார். இது போட்டிக்கு பின்னர் தெரியவந்தது. அப்போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றி அம்பயரின் அலட்சியத்தால் தடைப்பட்டது. இதனை செய்தியாளர் சந்திப்பின்போது பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ”சர்வதேச ஆட்டங்களுக்கு இணையானப் போட்டியில் ஆடுகிறோம். அம்பயர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கக்கூடாது” என கடுமையாக சாடினார்.
அதேபோல் மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீசுகையில் ஒரே ஓவரில் 7 பந்துகளை வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலானப் போட்டியில், ஃபீல்டிங்கில் சொதப்பும் சர்ஃபராஸ்கானுக்கு பதிலாக 20 ஒவர்களும் கருண் நாயர் களத்திலிருந்ததை கைஃப் கடுமையாக விமர்சித்தார். மாற்று வீரர்களைப் பயன்படுத்துவதில் அணிகள் தொடர்ந்து தவறாக நடந்துவருவதாக அம்பயர்கள் கவனிக்காததைக் குற்றம் சாட்டினார்.
இதேபோல் கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லா, நான்கு ஓவர்களை வேகமாக வீசிவிட்ட பின்னர் ஓய்வறை திரும்பினார். அவருக்கு பதிலாக களமிறங்கிய ரிங்கு சிங் முழு ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தார். இது குறித்தும் அம்பயர்கள் சம்பந்தப்பட்ட அணி கேப்டனிடம் கேள்வி எழுப்பவில்லை.
மேலும் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணியின் கடைசி ஓவர் பேட்டிங்கின்போது, அம்பயர்களின் நோ-பால் விவகாரத்தில் விரக்தியடைந்த தோனி, நேரடியாக களத்திற்கு வந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அம்பயர்களின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
பல்வேறு நாடுகளால் கவனிக்கப்பட்டுவரும் ஐபிஎல்லில் அம்பயர்கள் இவ்வாறு கவனக்குறைவாக செயல்படுவது, அதிர்ச்சியாகவும், கிரிக்கெட் நடுவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் விதமாகவும் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், அம்பயர்களின் கவனக்குறைவுகள் ஆட்டத்தின் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், இனி அம்பயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.