12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சன் ரைசரஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 48ஆவது லீக் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியில் வார்னர், சஹா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், சஹா 28 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு ரன்களை குவித்தது.
இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்த நிலையில், மணிஷ் பாண்டே 36 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக பேட்டிங் செய்த வார்னர் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசினார்.இதனால், ஹைதராபாத் அணி 16 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களை எடுத்திருந்தது.
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி, அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.