ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக களமறங்கிய கில் - லின் இணை 6 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இதனையடுத்து கில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, உத்தப்பா களமிறங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த லின் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியாவின் அற்புதமான கேட்ச்சால் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, அதிரடி வீரர் ரஸல் வந்தார். யாரும் எதிர்பார்க்காதவாறு மலிங்கா பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ரஸல் வெளியேற, கொல்கத்தா அணி 73 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் உத்தப்பா - ராணா ஜோடி நிதானமாக ஆடியது. இந்த இணை 17 ஓவர்களில் கொல்கத்தா அணியின் ஸ்கோரை 120 ரன்களாக உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ராணா 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஓவரில் உத்தப்பா 40 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்தது. மும்பை அணி சார்பாக மலிங்கா மூன்று விக்கெட்டுகளையும், ஹர்திக், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணி வெற்றிபெற 134 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.