ஐபிஎல் தொடர்களில் நடப்பு சாம்பியன்களாக பங்கேற்கும் அணிகளின் மைதானத்தில் தொடக்கப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளை நடத்துவது ஐபிஎல் நிர்வாகத்தின் விதிமுறைகளில் ஒன்று. இந்த வருட நடப்பு சாம்பியன்களாக சென்னை அணி விளையாடி வரும் நிலையில், 12ஆவது ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதேபோல் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது மூன்று பிரிவு இருக்கைகளில் (A,B,C) மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
டி, ஈ, எஃப் (D,E,F) இருக்கைகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் சென்னையில் இறுதிப் போட்டி நடத்துவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறவில்லை என்றால், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் சென்னையுடன் மோதிய ஹைதராபாத்திற்கு இறுதிப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடத்துவது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டி, ஈ, எஃப் (D,E,F) இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஐபிஎல் இறுதி போட்டிக்கும் அனுமதி கிடைக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.