13ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டி காக் 33 ரன்கள் அடித்திருந்த நிலையில், சாம் கரணிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - சவுரவ் திவாரி இணை, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.
இதில் சூர்யகுமார் யாதவ் 17 ரன்களிலும், சவுரவ் திவாரி 42 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா சாகோதரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சவுரவ் திவாரி 42 ரன்களை எடுத்தார். சென்னை அணி தரப்பில் இங்கிடி மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹார் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சனும், முரளி விஜயும் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 6 ரன்களிலும், முரளி விஜய் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடிகாட்டிய அம்பத்தி ராயுடு
அதிரடியாக ஆடிய அம்பத்தி ராயுடு 71 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ஜடேஜா 10 ரன்னும், சாம் கரண் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூ பிளசிஸ் 58 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபார வெற்றி பெற வைத்தார்.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் போட்டியிலேயே சென்னை அணி பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் தோனி கேப்டன்ஷிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ள 100ஆவது வெற்றியாகும்.
தல தோனியின் ஆட்டம் மிஸ்ஸிங்
தல தோனியின் அதிரடி ஆட்டத்தைக் காண காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்றைய போட்டியில் தோனி முன்னதாக களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை, 7ஆவது ஆட்டக்காராக தோனி போட்டியில் களமிறங்கினார். இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், ரன் ஏதும் எடுக்கவில்லை.