12-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பின்னர் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா - தவான் இணை களமிறங்கியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்தபோது, பொல்லார்ட்-ன் அசாத்தியமான கேட்ச்-ஆல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்ரம் - தவான் இணை நிதானமாக டெல்லியின் ஸ்கோரை உயர்த்தியது.
![pollard](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2788352_pollard.jpg)
பின்னர் அதிரடிக்கு மாறிய இங்ரம் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் தவான் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி 15 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த நட்சத்திர வீரர் பந்த் அதிரடியாக விளையாட, ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் 6,4,6 என பதினாறு ரன்களை விளாசினார் ரிஷப் பந்த்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ரிஷப் பந்த் வெளிப்படுத்த, கீமோ பவுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 17 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை கடந்து விளையாடியது.
இதனையடுத்து வந்த அக்ஸர் படேல் 4 ரன்னில் வெளியேற, ராகுல் டிவாட்டியா களமிறங்கினார். விக்கெட்டுகளை தொடர்ந்து பறிக்கொடுத்தாலும், ரிஷப் பந்த் 18 பந்துகளில் அரைசதம் கடந்து மும்பை பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இது ஐபிஎல்-லில் ரிஷப் பந்த் அடிக்கும் 9-வது அரைசதமாகும்.
![pant](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2788352_pant.jpg)
தொடர்ந்து வெறியுடன் ஆடிய பந்த், ஒரு கட்டத்தில் யார் பந்தை வீசினாலும் அதனை சிக்ஸராக மாற்றினார். இதனால் மும்பை அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்ததையடுத்து, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பந்த் 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.