ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் பிரித்வி ஷா -ஷிகர் தவான் இணை களம் இறங்கியது. அதிரடியாக ஆட நினைத்த பிரித்வி ஷா 11 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மந்தீப் சிங் பந்தில் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிகர் தவான் 41 பந்தில் அரைசதம் விளாசி 56 ரன்கள் எடுத்தபோது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 112 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஷிகர் தவான் விஜயன் வீசிய பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 15 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்திருந்தது. டெல்லி அணி வெற்றிபெற 40 ரன்கள் தேவைப்பட்டன.
அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 164 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று பஞ்சாப் அணியை தோற்கடித்தது.