12ஆவது ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் இதில் வெற்றிபெற்று, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
அதேபோல், ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஹைதராபாத் அணிக்கு எளிதாக அமையும்.
இதுவரை சொந்த மைதானத்தில் சென்னை அணி ஆடிய நான்கு போட்டிகளில் நான்கிலும் வெற்றிபெற்றுள்ளதால், ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சென்னை அணியின் பேட்டிங்கில் வாட்சன், ரெய்னா ஆகியோர் தங்களின் பேட்டிங் ஃபார்மை நிரூபிக்கும் வகையில் உள்ளதால், இன்றையப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்று வாட்சனுக்கு பதிலாக முரளி விஜய் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் வார்னர் - பெயர்ஸ்டோவ் ஆகியோரை நம்பியே விளையாடி வருகிறது. இன்றையப் போட்டியில் கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் ரன்களைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இம்ரான் தாஹிர், ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர். அதேபோல் ஹைதராபாத் அணியில் ரஷீத் கான், முகமது நபி மற்றும் நதீம் ஆகியோரின் ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சென்னை அணி ஆடிய 11 போட்டிகளில், 8 போட்டிகளில் சென்னை அணியும், மூன்று போட்டிகளில் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இன்றையப் போட்டியில் சென்னை அணியே வெற்றிபெறும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.