மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (டிசம்பர் 3) தொடங்கியது.
மைதானம் ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டதால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, பகல் 12 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதன்படி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் (70 ஓவர்கள்) இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. மயாங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சாஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியா ஆல்-அவுட்
போட்டியின் இரண்டாம் நாளான இன்று, தொடக்கத்திலேயே சாஹா 27 ரன்களுக்கும், அஸ்வின் ரன் ஏதும் இன்றியும் ஆட்டமிழந்தனர். பின்னர் அகர்வால், அக்ஸர் படேல் உடன் கூட்டணி சேர்ந்து ரன்களை குவித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா அணி 258/6 என்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து, இரண்டாம் செஷன் தொடங்கிய சற்று நேரத்தில் மயாங்க் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பத்து ஓவர்களுக்கு தாக்குபிடித்த அக்ஸர் படேல், 53 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜெயந்த் யாதவ் 12 ரன்களுக்கும், சிராஜ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்
குறிப்பாக, இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அஜாஸ் படேல், ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன், இந்த சாதனையை 1956ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜேசி லேக்கர், 1999ஆம் ஆண்டு இந்திய வீரர் அனில் கும்ளே ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மேற்கூறிய இருவரும் வலது கை சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற நிலையில், அஜாஸ் படேல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனையை மேற்கொண்ட முதல் நியூசிலாந்து வீரர் இவரே. நியூசிலாந்து அணியின் முன்னாள் பந்தவீச்சாளர் ஒன்பது விக்கெட்டுகள் வீழத்தியதே அந்த அணியின் சாதனையாக இருந்தது.
தற்போது பேட்டிங்கைத் தொடங்கியுள்ள நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. இம்மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: SA vs IND: இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு