கிறிஸ்ட்சர்ச்: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
தனது வாழ்வா, சாவா போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53 ரன்களை குவித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
சற்று கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். லாரா வோல்வார்ட் 80, லாரா குட்டால் 49 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், மிக்னான் டூ பிரீஸ் நிலைத்து நின்று ஆடி ஆட்டத்தை கடைசி கட்டம் வரை கொண்டு சென்றார்.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தீப்தி சர்மா பந்துவீச வந்தார். ஓவரின் இரண்டாம் ரன்-அவுட், ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் என கட்டுக்கோப்பாக தீப்தி வீசினார். இந்நிலையில், ஐந்தாவது பந்தை மிக்னான் தூக்கி அடிக்க ஹர்மன்பிரீத் கௌர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நோ-பால் என அறிவிக்கப்பட்டது. எனவே, இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் என்ற நிலை வர, தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றிபெற்றது.
இதன்மூலம், இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றமளித்தது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் நான்காவது இடம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
தற்போது, இந்தியாவின் தோல்வி மூலம் 7 புள்ளிகளுடன் மேற்கு இந்திய தீவுகள் நான்கம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. கேப்டன் மிதாலி ராஜின் இறுதி உலகக்கோப்பை தொடர் என கூறப்படும் இந்த தொடரில் லீக் சுற்றோடு இந்தியா வெளியேறி இருப்பது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.