அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று (நவ. 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66, விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர். அதன் பின் களம் கண்ட ஆஸ்திரேலிய அணி இலக்கை 43 ஓவர்களில் எட்டியது. இதனால் இறுதி போட்டியை வென்ற அந்த அணி 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றினாலும், தொடரின் நாயகனாக விராட் கோலியே தேர்வானார். 11 போட்டிகளில் விளையாடிய அவர் 765 ரன்கள் விளாசினார். அதில் 3 சதம் மற்றும் 6 அரைசதங்களும் அடங்கும். உலகக் கோப்பையை வெல்லும் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வியடந்த நிலையில், விராட் கோலியின் சகோதரியான பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; "நான் அறிவேன், நாம் அனைவரும் வேறு மாதிரியான முடிவையே எதிர்ப்பார்த்தோம்.
இருப்பினும் டீம் இந்தியாவுக்கான எங்களது ஆதரவு தொடரும். ஏன்னென்றால் தங்களது குடும்பத்து உறுப்பினர் வீழ்ச்சியடையும் போது அவரை கைவிட மாட்டார்கள். உண்மையில் நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் நேரம் இது" இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "இதயம் நொறுங்கியது.." தோல்வியை நினைத்து வருந்தும் சுழற்பந்து வீச்சாளர்!