மும்பை: இந்திய அணி வரும் ஜூலை மாதம் மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜூன் 10) அறிவித்தது.
இளம் இந்திய அணி
விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்கயா ரஹானே போன்ற மூத்த வீரர்கள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் இலங்கை பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஜூலை 13, 16, 18ஆம் தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளும், ஜூலை 21, 23, 25ஆம் தேதிகளில் மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பிருத்வி ஷா, முதல்முறையாக வெள்ளை பந்து ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடராஜன் அவுட்; சக்காரியா இன்
காயத்தில் இருந்து மீண்டுவிட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பளிக்கபடவில்லை. அதேநேரத்தில், கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய இடதுகை பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியாவுக்கு வாய்ப்பளிக்கபட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ் என ஐபிஎல்லில் அசத்திய இளம் சுழற்படை இலங்கைக்கு அச்சுறுத்தல் அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள், டி20 இந்திய அணி: ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குர்னால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.
வலைபயிற்சி பந்துவீச்சாளர்கள்: இஷான் பரோல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷார். சிமர்ஜூத் சிங்.
இதையும் படிங்க: HBD அல்பி மோர்க்கல்: தோனியின் பக்தனுக்குப் பிறந்தநாள்