ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் பல தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக பஞ்சாபிகள் திகழ்கிறார்கள். பொதுவாக இவர்கள் ஆக்ரோஷத்துடன், அதிரடியும் காட்டக் கூடியவர்கள்.
இந்த மண்ணில் கிடைத்த மற்றொரு தங்கம் ஹர்பஜன் சிங். இவர் 1980ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். இவரின் தந்தை சர்தார் சர்தேவ் சிங் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம்
கிரிக்கெட் ஆடிப்பழகிய ஆரம்பகாலத்தில் ஹர்பஜன் பேட்டிங் மீதே தீவிரம் கவனம் செலுத்தினார். ஆனால், அவருக்கு இயற்கையிலேயே சுழற்பந்து வீச்சு வந்தது. இதையடுத்து சுழற்பந்து வீச பயிற்சி எடுத்தார். அதில் கைதேர்ந்த நிலையில் இந்திய அணிக்கும் தேர்வானார்.
![Indian cricketer Harbhajan Singh birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/harbhajan_0304newsroom_1617454505_977.jpg)
இதையடுத்து 1998ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
![Indian cricketer Harbhajan Singh birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/harbajan-singh-17311_1602newsroom_1613468765_385.jpg)
ஆக்ரோஷ ஆட்டம்
அப்போது 18 வயதான ஹர்பஜன் சிங் தனது நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அதே ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஹர்பஜன் சிங் இடம் பிடித்தார்.
![Indian cricketer Harbhajan Singh birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/harbhajan-singh-1597915413_2703newsroom_1616857292_433.jpg)
இதையடுத்து ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இடம்பிடித்து ஆடினார். இதற்கிடையில் 2000ஆவது ஆண்டில் ஹர்பஜன் சிங்கின் தந்தை காலமானார். அதன்பின்னர் குடும்ப பொறுப்புகள் ஹர்பஜன் சிங் மீது விழுந்தன. தனது மூன்று சகோதரிகளுக்கும் ஹர்பஜன் சிங்தான் முன்னின்று திருமணம் நடத்திவைத்தார்.
சாதனைகள்
ஹர்பஜன் இதுவரை 103 டெஸ்ட், 236 ஒருநாள் போட்டி, 28 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இரு முறை சதம் விளாசியுள்ளார். 9 அரை சதங்களும் அடித்துள்ளார்.
![Indian cricketer Harbhajan Singh birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8c12c2a027e3e7ef7c5a8112ded62b1e_2304a_1619193051_119.jpg)
அதேபோல் டெஸ்ட்டில் 417 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அறிமுகமானது போல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் பயணத்தையும் ஹர்பஜன் சிங் 2015ஆம் ஆண்டு முடித்துக்கொண்டார்.
ஹேப்பி பர்த் டே பாஜி
அதன்பின்னர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடிவருகிறார். இன்றளவும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராகவும், இளைஞர்களின் உத்வேகமாகவும் திகழ்கிறார் ஹர்பஜன் சிங்.
![Indian cricketer Harbhajan Singh birthday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5d6a1b3941b69aa96cd0413ff7cd14d7_1403a_1615734717_1044.jpg)
ஹேப்பி பர்த் டே பாஜி, டர்பனேட்டர்!
இதையும் படிங்க : பிளாக் ஷீப் இணையத் தொடரில் நடிக்கும் ஹர்பஜன் சிங்