மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தர்மசாலாவில் நடந்த லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருந்தது. இருப்பினும், 2019ஆம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் கண்ட தோல்விக்கு நடப்பு சீசன் அரைஇறுதியில் நியூசிலாந்தை வீழ்த்த இந்திய வீரர்கள் புதுஉத்வேகம் கொண்டு உள்ளனர்.
நடப்பு சீசனில் இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்தும் மெச்சத்தக்க வகையில் உள்ளது. இந்திய வீரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக கோலோச்சி வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதியிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், உலக கோப்பை அரைஇறுதி ஆட்டங்களில் இந்திய நட்சத்திர வீரர்களின் பங்களிப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே காணப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் நாக் அவுட் சுற்றுகளில் பெரிய அளவில் சோப்பிக்கத் தவறி உள்ளனர்.
குறிப்பாக விராட் கோலி கடந்த 2011, 2015 மற்றும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களின் அரைஇறுதி சுற்றுகளில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜொலிக்கவில்லை. வெறும் 9, 1 மற்றும் 1 என மூன்று உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களின் அரைஇறுதி போட்டிளில் ஒட்டுமொத்தமாக 9 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார்.
அதேபோல் ரோகித் சர்மாவை பொறுத்தவரை, 2015 உலக கோப்பையில் 34 ரன்னும், 2019 உலக கோப்பையில் 1 ரன் மட்டுமே எடுத்து உள்ளார். நடப்பு சீசன் அரைஇறுதியில் கூட 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து உள்ளார். அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதியில் கே.எல்.ராகுல் 1 ரன் மட்டும் எடுத்தார்.
இந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்டவராக இக்கட்டான சூழ்நிலைகளில் டோனிக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்திச் சென்று ரன் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்பவராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 16 ரன்களும், 2019 நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதியில் 77 ரன்களும் ஜடேஜா குவித்து உள்ளார்.
இதையும் படிங்க : IND Vs NZ: கோலி - கில் கூட்டணியில் இந்தியா அதிரடி!