திருவனந்தபுரம் : இந்தியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் தொடர் மழை காரனமாக டாஸ் போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடக்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (அக். 3) நடைபெற இருந்த 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து விளையாட இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருந்தது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. காலை முதலே திருவனந்தபுரத்தில் மழை கொட்டி வந்ததால். தொடர் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும் மழை நின்ற பிறகும் ஆடுகளம் ஈரமாக காணப்பட்டதால் மேற்கொண்டு விளையாடும் வகையில் மைதானம் உள்ளதா என நடுவர்கள் ஆய்வு செய்தனர். ஆடுகளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்கும் என முன்னதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் காலை முதலே கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
மழை காரணமாக இன்றைய ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் நேரடியாக வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களமிறங்க உள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : World Cup Cricket 2023: பெங்களூரு ஸ்டேடியத்தில இவ்வளவு சிறப்புகளா! நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!