க்கெபெர்ஹா: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் செயின்ட் ஜார்ஜ் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி களமிறங்கிய வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். அதேபோல ஃஷபாலி வர்மா 29 பந்துகளுக்கு 24 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 பந்துகளுக்கு 19 ரன்களையும் எடுத்தனர்.
மறுப்புறம் பந்துவீச்சில் அயர்லாந்து அணியின் கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட்டுகளையும், ஆர்லா ப்ரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 156 ரன்கள் வெற்றி இலக்குடன் அயர்லாந்து பேட்டர்கள் களமிறங்கியுள்ளனர். 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 23 ரன்களை எடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுத்திக்கு தகுதி முன்னேறும் என்பதால் இரு அணிகளும் போராடி வருகின்றன. மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம் அணிகளும். பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் 4 வெற்றி என்ற கணக்கில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பி பிரிவில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகள் என்ற கணக்கில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என்ற கணக்கில் 4 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறும்.
இதையும் படிங்க: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் : இந்தியா - இங்கிலாந்து இணை சாம்பியன்