அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றது. லீக் மற்றும் அரைஇறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் மற்றும் நாக் அவுட் என விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இன்று (நவ. 19) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அதேபோல் லீக் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் சுதாரித்துக் கொண்டு வீறுநடை போட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசிய விராட் கோலி, 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசாத்திய திறனை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நெருக்கடி கொடுத்து வரும் பும்ரா, சுழற்பந்துவீச்சில் 16 விக்கெட்டுகள் எடுத்து தன் பலத்தை நிரூபித்து வரும் ரவீந்திர ஜடேஜா என இந்திய அணியின் பலத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பந்துவீச்சு, பேட்டிங் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் அணியாக இந்திய அணி திகழ்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிக கடுமையானதாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில், முதல் போட்டிக்கு பின் இதுவரை களமிறக்கப்படாத தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இறுதிப் போட்டியில் களமிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சற்று திணறக் கூடியவர்கள் என்பதால் அஸ்வினின் சுழல் மாயாஜாலம் அந்த அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டில் அந்த அணி பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் என பேட்டிங்கில் சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரர்கள் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் காணும் இடமெல்லாம் இந்திய ரசிகர்களின் தலைகளை காண முடியும் என்பது இந்திய அணிக்கு கூடுதல் மகிழ்ச்சிகர தகவல். ஏறத்தாழ 1 லட்சத்து 32 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் இடவசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. போட்டியை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போட்டி நடைபெறும் இன்று (நவ. 19) மழைக்கான வாய்ப்பு துளியும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் இறுதிப் போட்டியை காண வந்து உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுகின்றன்ர்.
பரிசுத் தொகை :
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. உலக கோப்பையை வெல்லும் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி தரப்பில் 33 கோடியே 20 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
அதேபோல், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 16 கோடியே 60 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அரைஇறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவி இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் 6 கோடியே 64 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு :
இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்) கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆஸ்திரேலியா : ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
இதையும் படிங்க : ஜெயிக்கிற அணிக்கு இவ்வளவு பரிசுத் தொகையா? வியக்க வைக்கும் பரிசுத் தொகை லிஸ்ட்!