ஹாங்சோ : ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தங்க பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்திய ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
இந்நிலையில், ஹாங்சோ நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மழை நின்ற போதும் மைதானத்தில் ஈரப்பதம் காணப்பட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணியில் நட்சத்திர மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய முன்அனுபவம் கொண்டவர்கள்.
அவர்களை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி பதக்கத்த வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதன் காரணமாக இறுதி போட்டிய்ல் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ஜுபைத் அக்பரி மற்றும் முகமது ஷாஜாத் ஆகியோர் நிதாரணமாக ஆடத்தொடங்கினர். இரண்டாவது ஓவரில் ஜுபைத் அக்பரி அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 18.2ஆவது ஓவர் வீசுகளையில் மழை பெய்யத்தொடங்கியது. நீண்ட நேரம் பெய்து வரும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால், 18.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.