இந்தூர் : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜன. 11ஆம் தேதி பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நாளை (ஜன. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
அதேநேரம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றிக்காக ஆப்கான் வீரர்கள் போராடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.
ஏறத்தாழ 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலையில் உள்ளது. வீரர்கள் திறமையாக செயல்பட்டு அணிக்கு நல்ல உத்வேகம் அளித்து வருகின்றனர்.
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தடம் பதித்து வருகின்றனர். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு!