மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளுக்கு 61 ரன்களை குவித்து அணிக்கு மிகப்பெரும் வலுசேர்த்தார்.
அதேபோல கேஎல் ராகுல் 35 பந்துகளுக்கு 51 ரன்களையும், விராட் கோலி 25 பந்துகளுக்கு 26 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் ங்கராவா, பிளஸ்ஸிங் முசரபானி, சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் பறிபோயின.
17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். 115 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். இந்தியா பந்துவீச்சில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்குவித்திட்டனர். அந்த வகையில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் மோத உள்ளது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்