வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 20) மவுன்ட் மாங்கானுவில் உள்ள மைதானத்தில் 2ஆவது டி20 போட்டி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தனர்.
அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளுக்கு 111 ரன்களை குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல இஷான் கிஷன் 31 பந்துகளுக்கு 36 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளுக்கு 13 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில் 192 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே ஃபின் ஆலன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் களமிறங்கிய டெவன் கான்வே 22 பந்துகளுக்கு 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 3ஆவதாக களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளுக்கு 61 ரன்களை குவித்தார். அவருக்கு பின் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதன்படி, இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனிடையே பந்துவீச்சில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: 2022 ஃபிபா கால்பந்து தொடர் - கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடக்கம்