புளோரிடா: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் மைதானத்தில் நேற்று (ஆக. 6) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 191 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக, ரிஷப் பந்த் 44 (31) ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 33 (16) ரன்களையும் எடுத்தனர். மே.இ.தீவுகள் பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப், ஓபெட் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதில், மெக்காய் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 66 ரன்களை வாரி வழங்கினார். சர்வதேச டி20 அரங்கில், ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்த மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார்.
தொடர்ந்து, விளையாடிய மே.இ.தீவுகள் 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மே.இ.தீவுகள் பேட்டிங்கில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 24 (8) ரன்களையும், ரோவ்மேன் பாவெல் 24 (16) ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு சார்பில் அர்ஷ்தீப் சிங் 3, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக தேர்வானார்.
கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஆக. 7) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மல்யுத்தத்தில் மீண்டும் 3 தங்கம் - பாரா டேபிள் டென்னிஸில் பவினாபென் தங்கம்!