டெல்லி: ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் 4 இடத்தை பிடித்துள்ளன.
இந்நிலையில் இன்று (அக். 25) நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில், 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி, 7வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டியானது தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து பலம் & பலவீனம்: உலகக் கோப்பையை 5 முறை மகுடம் சூடிய ஆஸ்திரேலியா அணி இந்திய மைதானங்களை கணிக்க முடியாமல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை நழுவியது. ஆனால் அதன் பின் நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் ஓபனிங் பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ், நல்ல ஃபார்மில் உள்ளனர். மற்ற வீரர்கள் நிலையாக ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். மற்றவர்கள் சிறப்பாக செயல்படாதது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறுபுறம் ஸ்கார்ட் எட்வர்ட் தலைமையிலான நெதர்லாந்து அணி சர்வதேச போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் நடப்பு தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வி கண்டாலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலக அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது.
நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களான மேக்ஸ் ஓடோவ்ட் மற்றும் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளிக்காமல் உள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் பந்து வீச்சில் இளம் வீரர்கள் நன்றாக செயல்படுவது அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
இதனால் இன்று (அக். 25) நடக்கும் போட்டியில் மும்முனைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடியைத் தர முடியும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்றது போல் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியளிக்குமா நெதர்லாந்து அணி என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இதையும் படிங்க: இலங்கை அணியில் இனி இவருக்கு பதில் இவர்.. யார் அவர்?