கொல்கத்தா: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நவ.7ம் தேதி மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இனி ஒரு இடம் மட்டுமே மீதம் உள்ளது. அந்த இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று(நவ.09) இலங்கை எதிர்கொள்கிறது. அதே போல் நாளை(நவ.10) பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
நாளை மறுநாள் (நவ.11) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் யார் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி தான் இந்தியாவுடனான முதல் அரையிறுதி போட்டியில் விளையாடும்.
இந்நிலையில் கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயங்களில் இருந்து மீண்ட பிறகு ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பயிற்சியின் போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர் உசாமா மிர் கூறுகையில் "அணியில் உள்ள அனைவரும் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விளையாட ஆசைப்படுகிறார்கள். பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரரும் போட்டியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வோம். அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் உள்ள அனைவருக்கும் இடையேயான உறவு நன்றாகவுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்! வாய்ப்பு இருக்கு?