ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 10 அணிகள் விளையாடி வருகின்றன.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய, இதுவரை 8 ஆட்டங்கள் நிறைவு பெற்று உள்ளன. நேற்று (அக். 10) ஐதராபாத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது ரிஸ்வான் வெற்றி இலக்கிற்கான ரன்களை அடித்தது முதல் நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு :
1. கடந்த 7ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்தது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2. அதே இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சிறப்புக்கு எய்டன் மார்க்ராம் உரிமையாளர் ஆனார்.
3. தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் மேலும் ஒரு வரலாற்று சாதனையை படைத்து உள்ளது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்தது, இலக்கை துரத்தி விளையாட்டிய இலங்கை அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 754 ரன்கள் அடிக்கப்பட்டு உள்ளன. உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
4. நேற்று (அக். 10) ஐதராபாத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு 344 ரன்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அப்துல்லா ஷபிக் (113 ரன்) மற்றும் முகமது ரிஸ்வான் (131 ரன்) ஆகியோரின் ஆபார ஆட்டத்தால், இலக்கை துரத்தி பிடித்து பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சிறப்பை பாகிஸ்தான் பெற்றது. இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை அயர்லாந்து அணி துரத்தி பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
5. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டாகாமல் 131 ரன்கள் குவித்து இருந்தார். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரால் அக்மல் 124 ரன்கள் குவித்ததே ஒரு உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அந்த சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்து உள்ளார்.
6. அதேபோல் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் மற்றொரு தனித்துவமான சாதனையால் கிரிக்கெட் உலகை அலங்கரிக்கிறது. அதாவது இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியில் குசல் மென்டிஸ் (122 ரன்), சதீரா சமரவிக்ரமா (108 ரன்) ஆகிய இருவரும் சதம் விளாசினர். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர்கள் அப்துல்லா ஷபிக் (113 ரன்) மற்றும் முகமது ரிஸ்வான் (131 ரன்) ஆகியோரும் சதம் விளாசினர்.
இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆட்டத்தில் 4 சதங்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 7ஆம், தேதி டெல்லியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டத்தில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டு இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் குயின்டன் டீ காக் (108 ரன்), வேன் டர் துசன் (108 ரன்), எய்டன் மார்க்ராம் (106 ரன்) ஆகியோர் சதம் விளாசினர்.
7. இலங்கை அணிக்கு எதிராக உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 8 ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உள்ளது. அதுவும் ஒரு சாதனையாக பதிவாகி உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய 8 ஆட்டத்திலும் இந்திய அணி வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் இடையிலான 9வது உலக கோப்பை லீக் ஆட்டம் வரும் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : ஆசிய விளையாட்டில் ஜொலித்த தமிழக வீராங்கனை..! பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்தது எப்படி?.. கூறுகிறார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!