சென்னை: 13வது ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் 12 வருடங்களுக்குப் பின் நடக்கிறது. இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. உலகக் கோப்பை தொடர் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அனைத்து அணிகளும் தங்களைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐசி உலகக் கோப்பை திருவிழா கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனை டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு வாத்து ஜோடிகள் பேட் வைத்து ரன்கள் எடுப்பது போலவும், கூகுளின் லோகோவில் இரண்டாவது 'o' க்குப் பதிலாக பந்தை உருவாக்கி உள்ளது. மேலும், கூகுள் தேடல் பாக்ஸ் அருகில் பேட்- பால் இருப்பதுபோல வடிவமைத்து கூகுள் நிறுவனம் அசத்தியுள்ளது.
13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதியான இன்று தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும், அதில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும்.
மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி வருகிற அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா, இந்தியாவில் 12 வருடங்களுக்குப் பின் நடக்கிறது. இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.
அப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றதுபோல், இந்த ஆண்டும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது 140 கோடி மக்களின் கனவாக உள்ளது. இதை இந்திய அணி நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: உலகக் கோப்பையை வெல்ல அனைத்து வழிகளிலும் போராட தயார் - ரோகித் சர்மா!