மெல்போர்ன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பைத்தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவ-13) ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் டி20 கோப்பையை இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
மெல்போர்னில் தொடங்கிய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புடன் 137 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 138 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரிலேயே அவுட்டாகினார். இதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக சென்றது.
இதனையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் நிதானமாகப் போராடி 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இங்கிலாந்து அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது. முன்னதாக 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, நடப்பு சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:20 ஓவர் தொடரை வென்று வரலாறு படைக்குமா பாகிஸ்தான் - முன்னாள் வீரர் பிரத்யேக பேட்டி