புனே : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்று வரும் 40வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் தொடங்கினர்.
நிதான அடத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் தனது பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடித்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மலானும் 87 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
மற்றொரு புறம் ஹாரி ப்ரூக் 11 ரன், ஜோஸ் பட்லர் 5 ரன், மொயின் அலி 4 ரன் என அடுத்தடுத்து வெளியேறினாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அபாரமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் நெதர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதற விட்டு துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு உறுதுணையாக கிறிஸ் வோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபாரமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். அதேபோல் கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (108 ரன்) ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 339 ரன்களை குவித்தது. கஸ் அட்கின்சன் 2 ரன்னும், அடில் ரசித் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். நெதர்லாந்து அணியை பொறுத்தவரை பாஸ் டி லீடி 3 விக்கெட்டும், அர்யன் தட், லோகன் வன் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நெதர்லாந்து அணி 340 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாட உள்ளது.
இதையும் படிங்க : England Vs Netherland : 3 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து திணறல்!