புனே : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் 40வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் விளாசியது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் மலான் 87 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் விளாசினர்.
இந்த மூவரின் அபார ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி இமாலய இலக்கை எட்டியது. 340 ரன்கள் இமாலய இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்கியது. நெதர்லாந்து அணிக்கு தொடக்க திருப்திகரமாக அமையவில்லை. 12 ரன்களிலே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மேக்ஸ் ஓ'டவுட் 5 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய காலின் ஆக்கர்மன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
நிலைத்து நின்று ஆடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் வெஸ்லே பாரெசி 37 ரன்களில் ரன் அவுட்டானார். 18 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை நெதர்லாந்து அணி எடுத்து உள்ளது. சைபிரண்ட் எங்கல்பிரச்சட் 22 ரன்களும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஓரளவு ரன்கள் சேர்த்த சைப்ரண்ட் 33 ரன்களுக்கு வில்லி பந்தில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய லீடே 10 ரன்களில் ரஷித் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய நிடமனுரூ ஸ்காட்டுடன் சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் 6 விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ஸ்காட் மொயின் அலி பந்தில் அவுட்டானார்.
இதற்கு அடுத்து வந்த பவுலர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி எளிதாக 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் நிடமனுரூ அதிரடியாக விளையாடி கடைசி வரை 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி, ரஷித் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையும் படிங்க : கிளென் மேக்ஸ்வெல்லுக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து!