புனே: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை நிதானமாக நின்று ஆடி ரன்களை குவித்தனர். இந்த இணை 5 ஓவர்களில் 31 ரன்கள், 10 ஓவர்களில் 65 ரன்கள் என சீராக ரன்னின் வேகத்தை அதிகரித்து வந்த நிலையில் 14 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் - கங்குலி (21 முறை) இணைக்கு அடுத்தப்படியாக, அதிக முறை 100 ரன்களை சேர்த்த பாட்னர்ஷிப் என்ற மைல்கல்லை ரோஹித் - தவான் (17 முறை) இணை எட்டியுள்ளது. இந்த போட்டியில் தவான் 44 பந்துகளில் தனது 42ஆவது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதனையடுத்து நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 37(37) ரன்களுக்கு, அதில் ரஷித் சுழலில் சிக்கி போல்டானார். அடுத்த களமாடிய கோலி நிதானம் காட்ட, தவான் அடித்து ஆடி வந்தார். அப்போது ரஷித் வீசிய 16ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 67 (56) ரன்னில் தவான் வெளியேறினார்.
அடுத்த ஓவரை வீச வந்த மொயின் அலி தன் மிரட்டலான ஆஃப்-பிரேக் டெலிவரி மூலம், கேப்டன் விராட் கோலியையே நிலைக்குலைய வைத்தார். அப்பந்தை சரியாக நோட்டமிடாத கோலி, அதை ஆஃப் திசையில் விரட்ட நினைத்து ஸ்டம்ஸை திறந்து ஆட, பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதில் 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களை எடுத்து கோலி வெளியேறினார்.
கடந்த போட்டியில் சதம் அடித்து மிரட்டிய ராகுல், இப்போட்டியில் 7(18) ரன்னில் லிவிங்ஸ்டனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கியுள்ள ஹர்திக் பாண்டியா - ரிஷப் பந்த் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கவனமாக ஆடினர். பந்த் 44 பந்துகளில் தனது மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து இருவரும் அதிரடியாக ஆடிவந்த நிலையில், 36ஆவது ஓவரில் சாம் கரன் வீசிய பந்தில் பட்லரிடம் கேட் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பந்த் 5 பவுண்டரி, 4 சிக்சர் என 62 பந்தில் 78 ரன்கள் அடித்து இம்முறையும் சதத்தை தவறவிட்டார். பின், ஹர்திக் பாண்டியாவும் 36 பந்தில் தனது ஏழாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
களத்தில் இருந்த பாண்டியா சகோதரர்கள் மேல் நம்பிக்கை திரண்டுவந்த நேரத்தில், ஹர்திக், ஸ்டோக்சிடம் தன் ஸ்டம்ப்பை பறிகொடுத்து நடையைக்கட்டினார். முதல் போட்டியில் அதிரடி காட்டிய குர்னல் பாண்டியா இன்று பொறுமைக் காட்ட, மறுமுனையில் ஷர்துல் தாக்கூர் வெளுத்து வாங்கினார்.
டோப்லி, ஸ்டோக்சின் அடுத்தடுத்த ஓவர்களில் சிக்சர் அடித்து மிரட்டிய தாக்கூர் 30 (21) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து குர்னல் பாண்டியாவும் 25(34) விக்கெட்டை இழக்க இந்தியாவின் ரன் வேகம் குறைய ஆரம்பித்தது.
இறுதிநேர வீரர்கள் வந்த வேகத்தில் கிளம்ப, இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன், மொயின் அலி, லிவிங்ஸ்டன், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.