லண்டன்: இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இதனிடையே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 6ஆம் தேதி கண்டறியப்பட்டது. அவர் உள்பட பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், இயன்முறை மருத்துவர் நிதின் படேல் ஆகியோர் அவர்களின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 7ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதனால், ரவி சாஸ்திரி உள்பட நால்வரும் மான்செஸ்டர் நகரில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியோடு பயணிக்க மாட்டார்கள் என்றும் லண்டன் நகரத்திலேயே 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று (செப்.10) பிற்பகல் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்துசெய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கரோனா அச்சம் காரணமாக வீரர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காணவிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரவி சாஸ்திரி உள்பட நால்வரும் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்: பிசிசிஐ