கிரிக்கெட்டில் EL CLASSICO மோதல் என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மே 12) நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்தில் களமிறங்கிய மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரிதுராஜ் கேக்வாத் - டிவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
இன்னிங்ஸின் முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். லெக் சைடில் வந்த பந்தை திவான் கான்வே மிட் ஆஃப் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படாமல் அவரது பேடில் பட்டது. இதையடுத்து சாம்ஸ் கள நடுவரிடம் எல்பிடபிள்யூ முறையிட்டார். லெக் சைடில் வந்த பந்து ஸ்டம்புகளை விலகி செல்வது எளிதாக தெரிந்தும் நடுவர் கான்வேவிற்கு அவுட் கொடுத்தார்.
மைதானத்துக்குள் பவர் கட்: டிஆர்எஸ் முறையை பயன்படுத்தலாம் என நினைத்த கான்வேவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மைதானத்தில் பவர் கட், எனவே டிஆர்எஸ் முறையை பயன்படுத்த முடியாது என நடுவர் தெரிவித்ததால் கான்வே மற்றும் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தமிழ்நாட்டில் மின் தடைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முறை அணில்களை காரணமாக கூறியது போல, வான்கடே மைதானத்திலும் அணில்கள் ஓடியதா என கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் பறக்கவிட்டனர்.
தொடர்ந்து உத்தப்பாவிற்கும் பும்ரா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ வழங்கப்பட்டது. அப்போதும் இதே பவர் கட் காரணம் சொல்லப்பட்டதால் உத்தப்பா கள நடுவர்களிடம் சிறிது வாக்கு வாதம் செய்த பிறகு பெவிலியன் திரும்பினார். பவர் கட் பிரச்னையால் 2 விக்கெட்டுகளை இப்படி அநியாயமாக இழந்து விட்டோமே என ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
இதையும் படிங்க: ஜடேஜா Vs சிஎஸ்கே நிர்வாகம் - அணியில் இடமில்லாததால் விலகினாரா - ரசிகர்கள் அதிர்ச்சி!