சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தான் தொலைத்த பச்சை தொப்பி கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக, மெல்போர்ன் நகரிலிருந்து சிட்னிக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவரது பச்சை நிற தொப்பியை தொலைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழி தெரியவில்லை என கடைசி முயற்சியாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன். சில தினங்களுக்கு முன் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு எனது லக்கேஜ் எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது எனது பச்சை நிற தொப்பி காணாமல் போயுள்ளது. சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து பார்த்தபோது, போதுமான தகவல் கிடைக்கவில்லை. எனது தொப்பியை யாராவது எடுத்திருந்தால், தயவுசெய்து கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. என்னிடம் உள்ள மற்றொரு பேக்கை பரிசாகக் கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பச்சை தொப்பி கிடைத்துவிட்டதாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “எனது பச்சை தொப்பி கிடைத்துவிட்டது என்ற செய்தியை நான் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், ஹோட்டல் நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வழங்கப்படும் கிரிக்கெட் ஜெர்சிக்கள், தொப்பிக்கள் உள்ளிட்ட உபகரணங்களை வீரர்கள் கௌரவமானதாக கருதுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியுடன், தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விரைவில் ஓய்வு பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கேப் டவுனில் வென்ற முதல் ஆசிய அணி; 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!