12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்குழுவில் அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால், ரசிகர்கள் மிகவும் வருத்தமாக உள்ளனர். இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருந்த நான்காவது வரிசை பிரச்னையை அவர்தான் தீர்த்து வைத்தார். இந்நிலையில், இவர் இந்திய அணியில் தேர்வாகதது குறித்து ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியது.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹார்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், ராயுடு இந்திய அணியில் எடுக்கப்படாததற்கு மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
33 வயதான ராயுடு இந்திய அணிக்காக இதுவரை 55 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,694 ரன்களை அடித்துள்ளார். அதில், மூன்று சதம், 10 அரைசதம் அடங்கும். இவரது பேட்டிங் ஆவரேஜ் 47.06 ஆக இருக்கிறது. சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரிவில் களமிறங்கி இந்திய அணிக்காக பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு இவர் பேட்டிங் செய்துள்ளார்.
மறக்கமுடியாத 2018:
ராயுடுவின் கிரிக்கெட் பயணத்தில் 2018ஆம் ஆண்டு மறக்கமுடியாதவை. ஏனெனில் சிறந்த மிடில்கிளாஸ் என்ற பெயரை இவர் பெற்றார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி 602 ரன்களை குவித்து அசத்தினார். அதுவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்திய ராயுடு, கடந்த ஐபிஎல் தொடரில் தான் எந்த வரிசையில் களமிறங்கினாலும் சிறப்பாக ஆடுவேன் என்பதை நிரூபித்திக்காட்டினார்.
ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஃபார்மை ராயுடு, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுத்தினார். 11 போட்டிகளில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் என 392 ரன்களை அடித்தார். இதில், இவரது பேட்டிங் ஆவரேஜ் 56. இதைத்தவிர, இந்த 11 போட்டிகளில் இவர் மூன்று முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் இவர் மூன்றாவது வீரராக களமிறங்கி கோலி இல்லாத குறையை தீர்த்துவைத்தார். அந்தத் தொடரில் இவர் இரண்டு அரைசதம் உட்பட 175 ரன்களை அடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இவர் நான்காவது வரிசையில் அடித்த ஸ்கோர்கள் 22, 73, 22,100. ஒரு சதம், ஒரு அரைசதம் என 217 ரன்களை எடுத்தார். குறிப்பாக, 2014-க்கு பிறகு ராயுடு இந்தத் தொடரில்தான் நான்காவது வரிசையில் அதுவும் நான்கு வருடங்களுக்குப் பின்னர் ஆடினார்.
கோலியின் பாராட்டும் உலகக்கோப்பை கனவும்:
அந்தத் தொடரில் ராயுடுவின் அசத்தலான ஆட்டத்தைப் பார்த்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டினார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரிவில் களமிறங்குவதற்காகவே இவர் டிசைன் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அனுபவம் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணிக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தத் தொடரில் இருந்து உலகக் கோப்பைத் தொடர் வரை அவருக்கு இன்னும் நேரம் உள்ளது.
நான்காவது வரிசையில் களமிறங்குவதற்கு ஏற்ற சாய்ஸ் ராயுடுதான். நீண்ட நாட்களாக இருந்து வந்த நான்காவது வீரர் பிரச்னை தீர்ந்துவிட்டது எனத் தெரிவித்தார். இதனால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என ராயுடுவும் அவரது ரசிகர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
மறக்க வேண்டிய 2019:
2018ஆம் ஆண்டு ராயுடுவிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு சற்று ஏற்றமும் இறக்கமுமாகவே அவருக்கு அமைந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவர் ஆவரேஜாகத்தான் ஆடினார். இருப்பினும் அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் 190 ரன்களோடு முதலிடம் பிடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்தான் இவரது கிரிக்கெட் வாழ்வையே முற்றிலும் தலைகீழாக மாற்றியது என்றே கூறலாம். மூன்று போட்டிகளில் மட்டுமே இவர் நான்காவது வரிசையில் களமிறங்கினார். அதில், அவர் அடித்த ஸ்கோர் 13, 18, 2. இதனால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்புகளை வீணடிக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது எழுந்தன.
ராயுடுவின் வீழ்ச்சி, விஜய் சங்கரின் எழுச்சி:
இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இந்திய வீரர் விஜய் சங்கர் அணியில் இடம்பெற்று இருந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்தான் இவர் அதிகம் பேசப்பட்ட வீரராக மாறினார். ராயுடு பேட்டிங்கில் மட்டும் இந்திய அணிக்காக பங்களிப்பை வெளிப்படுத்தினார் என்றால், விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டராக அசத்தினார்.
ராயுடுவின் வீழ்ச்சி, விஜய் சங்கருக்கு எழுச்சியாகவே இருந்தது. உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், ராயுடு மோசமான ஃபார்முடன் இருந்ததால் மீண்டும் நான்காவது வீரராக யார் களமிறங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தோனி, தினேஷ் கார்த்திக் இவர்களது பெயர்கள்தான் ராயுடுவின் பெயரை விட அதிகமாக கேட்டது.
ராயுடுவின் உலகக்கோப்பை கனவு வீண்:
இதைத்தொடர்ந்து, 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயுடுவின் பெயர் அணியில் இடம்பெறவில்லை.
ராயுடுவிற்கு பதிலாகத்தான் கே.எல்.ராகுல், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், நான்காவது வரிசையில் களமிறங்குவதற்கு இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் உள்ளனர் என இந்தியத் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார்.
மூன்றே போட்டிகளில் ராயுடு நீக்கம்:
எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்ததுபோல, நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய இந்திய அணிக்கு ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளது. இருப்பினும், இந்திய அணி மீண்டும் நான்காவது வரிசை பேட்டிங்கிற்கு ஆப்ஷன்களைத் தேடித்தான் போகிறதே தவிர, இந்த வீரர்தான் உறுதியாக நான்காவது வரிசையில் களமிறங்குவார் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேற்கூறியதைப் போலவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்றுப் போட்டிகளில் ராயுடு மோசமாக விளையாடியதால்தான் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பலமுறை நான்காவது வீரராக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு வெற்றிகளைத் தேடித் தந்த ராயுடுவை, வெறும் மூன்றே போட்டிகளை வைத்து அவரது ஆட்டத்திறனை எடை போட்டது சரியா என்பதை விட தவறு என்றுதான் கூற வேண்டும்.