உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக ஆடி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி களமிறங்கியபோது, மழை குறுக்கிட்டதால், 40 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
பின்னர் இறுதியில் பாகிஸ்தான் அணி 212 ரன்களை மட்டும் எடுத்து டி/எல் விதிப்படி 89 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதனால் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை ஏழாவது முறையாக வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.
இப்போட்டி முடிந்து 10 நாட்கள் நெருங்கிவரும் நிலையில், அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது இணையத்தை கலக்கிவருகிறது. ஆம், இப்போட்டியின்போது மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இளம் இந்திய ரசிகர் ஒருவர், அங்கிருந்த காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அப்போது அந்தப் பெண் அவரது காதலை ஏற்றுக்கொண்டு ஆரத்தழுவி முத்தமிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் சத்தமிட்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தக் காணொலிக் காட்சி அப்பெண் தனது ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடவே அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.