கிரிக்கெட் கமெண்ட்ரியில் எவ்வளவோ வார்த்தைகளை கேட்டிருப்போம். ஆனால், ஒரு சிலரது மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். ‘Yuvraj Singh, Six Sixes in an over’, ‘Dhoni finishes off in a style’ அந்த லிஸ்ட்டில் ‘Remember the name’ என்ற கமெண்ட்ரிக்கும் முக்கிய இடமுண்டு. இந்த வார்த்தை ஒருவருக்கு அடைமொழியாகவும் வந்துள்ளது என்றால் அவர் கார்லோஸ் பிராத்வெயிட்டாகத்தான் இருப்பார்.
அந்த ஒரு போட்டி மட்டுமின்றி 2019 உலகக் கோப்பையில் தி பெஸ்ட்டாக அமைந்தப் போட்டியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த பிராத்வெயிட் இன்று 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பொதுவாக, மற்ற அணிகளில் எத்தனை அதிரடி வீரர்கள் உள்ளனர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அப்படி முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே அதுதான்.
அப்படி அந்த இரண்டு தராசுக் கோட்டிற்கும் நடுப்புள்ளியாக அமைந்தவர் கார்லோஸ் பிராத்வெயிட். அதுமட்டுமில்லாமல் அந்த இரண்டு தராசுக் கோட்டை அதிரடி, டிஃபெண்ட் என இரண்டு வகை பிரித்தாலும் இவர் சென்டரில்தான் இருப்பார். ஏனெனில் இவரால் அதிரடியாகவும் ஆட முடியும், டிஃபெண்ட் செய்தும் ஆட முடியும். அதற்கு முக்கிய காரணம் ராகுல் டிராவிட், பீட்டர்சன் ஆகிய இவரது ரோல்மாடல்கள்தான்.
6.4 அடி என வழக்கமான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தோற்றம் கொண்ட இவர், கரிபியன்கள் அணியில், 2011இல் அறிமுகமானார். அப்போது, பெரிய அளவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்களிடையே இவருக்கு பெரிய அறிமுகம் கிடைக்கவில்லை. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் இவரை 2016 டி20 உலகக்கோப்பையில் நினைவில் வைத்திருப்பதற்கு முன்னதாகவே, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் 2015இல் நினைவில் வைத்திருந்தது.
2015இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியின் மூலம், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேற்கூறியதை போலவே, அதிரடி வீரர் எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வருவார் என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், தான் யார், தனது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அந்தப் போட்டியில் காண்பித்திருப்பார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகளை இழந்து 551 ரன்கள் குவித்து டிக்ளெர் செய்தது.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான நேரத்தில் எட்டாவது வீரராக நுழைந்த இவர், தான் முதலில் டெஸ்ட் மேட்ச் ப்ளேயர் அதன்பிறகுதான் அதிரடி ஆட்டமெல்லாம் என்பதை வெளிப்படுத்தினார். ஹசல்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சீடில், நாதன் லயான் என மிரட்டலான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டார். கீமார் ரோச்சுடன் பார்ட்னர்ஷிப் வைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஃபோலா ஆன் செய்வதைத் தவிர்த்தார். 126 பந்துகளை எதிர்கொண்ட இவர், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என அறிமுக போட்டியில் 59 ரன்களை விளாசினார்.
அப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தாலும், பாகுபலியை போல் அணியை காப்பாற்றக்கூடிய நாயகன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிறந்தார். டெஸ்ட் மேட்ச் ஆடியாச்சு அடுத்து ஒருநாள்தானே என்பதை போல, மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னால், டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபெண்ட் செய்தும் ஆட முடியும் அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆட முடியும் என்பதை உணர்த்தியிருப்பார். ஏனெனில், இவரின் ரோல்மாடல்கள் ராகுல் டிராவிட், பீட்டர்சன் ஆயிற்றே.
மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போன்றுதான் பிராத்வெயிட்டும். நின்ற இடத்தில் இருந்து ஷாட்டுகளை ஆடுவார். இவரது உயரத்திற்கு பேட் மட்டுமல்ல பவுண்ட்ரிகளின் அளவும் சின்னதாகத்தான் தெரியும். சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வழக்கம் போல், ரன் குவிக்க தடுமாறியது. ஆறு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், களத்தில் இறங்கிய பிராத்வெயிட், சிட்னி மைதானத்தை தனதாக்கி மீண்டும் அணியை காப்பாற்றினார். 71 பந்துகளில் ஏழு பவுண்ட்ரி, நான்கு சிக்சர்கள் என 69 ரன்களை விளாசினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியும் 330 ரன்களை குவித்தது.
இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிலை நாட்டிக்கொண்ட இவரை 2016 ஐபிஎல் தொடரின் ஏலத்தில் வாங்க டெல்லி, கொல்கத்தா அணிகள் போட்டி போட்டுக்கொண்டது. ரூ. 30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இவரது ஆரம்ப விலை 14 முறை அதிகரித்து இவரை ரூ. 4.2 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் வாங்கியது. பின்னர், 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அறிமுகமானார். லீக் போட்டிகளை விடவும், ஃபைனலில் இவர் ஆடிய ஆட்டம் ரூத்ரதாண்டவமாக இருந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இதில், 156 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, ஸ்ட்ரைக்கில் இருந்தார் பிராத்வெயிட். சிட்னி மைதானமே சின்னதாக தெரிந்த இவருக்கு, ஈடன் கார்டன் ஒன்றும் பெரிதாகத் தெரிய நியாயமில்லை. ஸ்டோக்ஸ் வீசிய முதல் நான்கு பந்துகள் மூலம் நின்ற இடத்தில் இருந்தே ஈடன் கார்டன் மைதானத்தின் அளவை அளந்து பார்த்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டாவது முறையாக டி20 கோப்பையை தூக்கச் செய்தார்.
ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்தை இவர் லாங் ஆன் திசையில் சிக்சருக்கு வின்னிங் ஷாட்டாக பறக்கவிட்டபோது, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் கமெண்ட்ரியில் ரீமம்பர் தி நெம், கார்லாஸ் பிராத்வெயிட்... என கூறிய கமெண்ட்ரி மூலம் உலகமே இவரது பெயரை நினைவில் வைத்துக்கொண்டது. பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 கேப்டன் என்ற பொறுப்பும் இவரது கையில் வந்தது. கேப்டன் என்பதை விட வீரராகத்தான் சிறப்பாக ஆடுகிறார்.
2016இல் எப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டுமில்லாமல், கிரிக்கெட்டிற்கு மறக்க முடியாத ஃபைனல் போட்டி தந்தாரோ அதேபோல், தற்போது நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் மறக்க முடியாத போட்டியையும் தந்தார். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி உலகக் கோப்பையை அடுத்த கியருக்கு எடுத்துச்சென்றது.
அப்போட்டியின் மூலம், 1983ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கபில் தேவ் ஆடிய இன்னிங்ஸ் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவுக்கு கொண்டு வந்திருப்பார் இந்த பாகுபலி. மெல்போர்ன், சிட்னி, கொல்கத்தா வரிசையில் மான்செஸ்டர் மைதானமும் இவரை நினைவில் வைத்துக்கொண்டது. 292 ரன்கள் டார்கெட் உடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 142 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தபோது, இவர் ஆறாவது வீரராக வந்தார். அப்போது அணியின் வெற்றிக்கு 150 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், 166 பந்துகள் கைவசம் இருந்தன. ஆனால், பிராத்வெயிட்டுக்கு பிறகு வந்த வீரர்கள் ஆட்டமிழந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது.
புதுப்பேட்டை படத்தில் தனுஷ் முதலில் ரெளடி கும்பலிடம் மாட்டிக்கொண்ட போது அது அவ்வளவுதான் அது தேறாது என்ற அன்புவின் வசனத்தைப் போல்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதை அவ்வளவுதான் முடிந்தது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், அன்பு பேசியதற்கு பின் படத்தில் என்ன என்ன நடந்ததோ அதேதான் மான்செஸ்டரிலும் நடந்தது.
தனி ஆளாக நின்று டிரெண்ட் போல்ட், ஃபெர்குசன், மேட் ஹென்றி, என மிரட்டலான நியூசிலாந்து பவுலிங் அட்டாக்கை, இவர் ஒரு கை பார்த்தார். கீமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோருடன் பிராத்வெயிட் வைத்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவரில் 47 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்தது. பலமுறை இக்கட்டான நிலையை எதிர்கொண்ட மாவீரனுக்கு இது சாதரணமான நிலையாகத்தான் தெரிந்தது. கடைசி 18 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், மேட் ஹென்றி 48ஆவது ஓவரை வீச வந்தார்.
அந்த ஓவரை எதிர்கொண்ட இவர், மூன்று சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து டி20 ஃபைனல் போட்டியை ரசிகர்களுக்கு கண்முன் கொண்டுவந்தார். பின்னர் அந்த ஓவரில் ஒரு பவுண்ட்ரி, ஒரு சிங்கில் என 25 ரன்களை விளாசினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது, நீஷம் வீசிய முதல் மூன்று பந்துகளை வீணடித்துவிட்டு நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடி, ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை மான்செஸ்டரில் பதிவு செய்தார்.
பின்னர் ஆறு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பிராத்வெயிட் அடித்த ஷாட்டை, சிக்சர் லைனில் போல்ட் பிடிக்க, படத்தில் வரும் நெகடீவ் க்ளைமாக்சை போலவே இந்த போட்டியும் முடிந்தது. இதனால், தோல்வி அடைந்த சோகத்தில் மைதானத்தில் உட்கார்ந்த இவரை நியூசிலாந்து வீரர்கள் கட்டித் தழுவி ஆதரித்தனர். 82 பந்துகளில் 9 பவுண்ட்ரி, ஐந்து சிக்சர்கள் என 101 ரன்கள் அடித்து, உலகக் கோப்பையில் மறக்கமுடியாத இன்னிங்ஸைத் தந்தார். சிறு இன்ச் வித்தியாசத்தில், இவரது ஆட்டம் வீணில் முடிந்தாலும், இவரது போராட்டத்தை வரலாறு நிச்சயம் நினைவில் வைத்திருக்கும். ரசிகர்களுக்கு இதுபோன்ற மறக்கமுடியாத நிகழ்வுகளைத் தந்த பிராத்வெயிட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!