இந்திய கேப்டன் விராட் கோலி குறுகிய காலத்தில் பல சாதனைகளை தகர்த்தெறிந்துவருகிறார். அதில் மேலும் ஒரு சாதனையாக 11 ஆயிரம் ரன்களைக் குறைந்த போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பேசுகையில், விராட் கோலி மனிதனே அல்ல. அவர் ஒரு இயந்திரத்தைப் போல் விளையாடிவருகிறார். தற்போது உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார்போல் விராட் உடற்பயிற்சி கூடத்திலேயே நேரம் செலவிட்டு வருகிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கிரிக்கெட்டராக மிகப்பெரிய பக்குவம் அடைந்துள்ளார். ஒவ்வொரு முறை களமிறங்குகையிலும் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியினரை திணறடிக்கிறார்.
எனக்கு சச்சின் டெண்டுல்கர்தான் அனைத்து காலத்திலும் சிறந்த வீரர். அவருடன் விராட் கோலியை ஒப்பிட விரும்பவில்லை. ஆனால் கோலியின் ஆட்டம் இளம் தலைமுறை விரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.