இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. திரில்லர் திரைப்படங்களை விட பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றுத் தந்த பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து இல்லை. இங்கிலாந்து அணியை வெற்றிகரமாகத் தலைமை தாங்கி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்து சாம்பியனாக்கிய இயான் மார்கன், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு அயர்லாந்து அணியை வழி நடத்தியுள்ளார். மேலும் அயர்லாந்து அணிக்காக 23 ஒரு நாள் போட்டி விளையாடி 744 ரன்களை குவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் தீயாக விளையாடி 84 ரன்களை குவித்து ஆட்டம் டையில் முடிய முக்கிய காரணமாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தில் பிறந்தவர். தனது தந்தையின் வேலை காரணமாக 12 வயதில் இங்கிலாந்து வந்தார். 2013ஆம் ஆண்டு பெற்றோர்கள் நியூசிலாந்து திரும்பிய போதும், இங்கிலாந்திலேயே இருந்து 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்துள்ளார் இந்த நியூசிலாந்தின் 90's கிட்.
அதேபோல நேற்று இங்கிலாந்து அணிக்காக சூப்பர் ஓவரில் அட்டகாசமாக பந்து வீசிய ஆர்ச்சர், பார்படோஸ் நாட்டில் பிறந்தவர். இவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் ஆடியவர். இவர்கள் மட்டுமல்ல, தொடரில் ஜொலித்த ஜெசன் ராயும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.