சவுதம்டனில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமெண்டின் முத்திரையை தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸில் பயன்படுத்தினார்.
இது குறித்து ஐசிசியின் பொது மேலாளர் கிளாரி பர்லான், உடனடியாக தோனி பயன்படுத்தும் ராணுவ முத்திரையை நீக்க சொல்லி பிசிசிஐ-யை அறிவுறுத்தியுள்ளோம். விளம்பரதாரரின் முத்திரை மட்டுமே பயன்படுத்துவதற்கு ஐசிசி அனுமதியளித்துள்ளது என்றார். இது சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், தோனி தனது கிளவுஸில் உள்ள முத்திரையை நீக்க தேவையில்லை. வர்க்க ரீதியாகவோ, மத ரீதியாகவோ உள்ள அடையாளங்களை பயன்படுத்துவதற்குதான் ஐசிசி தடை விதித்துள்ளது. அதேபோல் தோனி கிளவுஸில் உள்ள முத்திரை ராணுவம் தொடர்பான முத்திரை எனக் கூற முடியாது. இதனால் பிசிசிஐ சார்பாக ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பிசிசிஐ சார்பாக தோனி தனது கிளவுஸில் உள்ள முத்திரையை பயன்படுத்த விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்ற விஷயங்களுக்கு விண்ணப்பித்து முறையாக ஐசிசியிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.