நாட்டிங்ஹாமிலுள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிரிச்சி காத்திருந்தது. வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நல்ல பார்மில் இருந்ததால், வார்னர் 3, கேப்டன் பின்ச் 6 ரன்கள் என அடுத்தடுத்த பெவிலியனுக்கு அனுப்பினர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா 13, மேக்ஸ்வெல் டக் அவுட் ஆக 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா அணி. அப்போது களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டத்தை கடைபிடிக்கத் தொடங்கினார். அவருடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. 30 ஓவரில் 147 ரன்கள் இருந்தபோது சிறப்பாக ஆடி வந்த கேரி 45 ரன்களில், ரசல் பந்தில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நாதன் கவுல்டர் நைல் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். நிதனமாக ஆடி வந்த ஸ்மீத் அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பவுண்டரி, சிக்ஸர் என ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த கவுல்டர் நைல் 60 பந்துகளில் 92 ரன்கள் விளாசி பிராத்வெயிட் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வெயிட் 3, ரசல், காட்ரெல், தாமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 289 வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடத்தொடங்கியுள்ளது.