உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அனைத்து நாட்டு அணிகளும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிவித்துவிட்டன.
இந்தத் தொடரில் ஜேசன் ஹோல்டர் தலைமையில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில், கெயில், டேரன் பிராவோ, பிராத்வெய்ட், ஆண்டர் ரஸ்ஸல், கெமார் ரோச் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் மட்டுமே இடம்பிடித்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் இளம் காளையர்களாகவே உள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்படனில் மே 19 (இன்று) முதல் 23ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான உலகக்கோப்பை அட்டவணையில், 23ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்குவதாகவும், மே 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடன், மே 28ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை, வெ.இண்டீஸ் சந்திக்க உள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு காயம் ஏற்படும் சூழ்நிலையில் களமிறக்கப்படும் 10 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர்களான டுவைன் பிராவோ, கெய்ரன் பொல்லார்ட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இருவரும் பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வல்லமை படைத்தவர்களாவர்.
டுவைன் பிராவோ இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி இரண்டாயிரத்து 968 ரன்களும், 199 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகித்ததே இவர் ஆடிய கடைசி ஒருநாள் போட்டியாகும்.
பின் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாதியிலேயே நாடு திரும்பியது, அதன்பின் நடைபெற்ற அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியதே இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய கடைசி போட்டியாகும். அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் மட்டும் பங்கேற்று வந்த இவர் 2018ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.
இதேபோன்று மற்றொரு அதிரடி ஆல்-ரவுண்டரான கெய்ரன் பொல்லார்டும் கடந்த இரண்டு வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பெறாமல் அவ்வபோது டி20 அணியில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த இரு வீரர்களும் உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது இவர்களின் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இந்த இரு வீரர்களுக்கும் இதே போன்று 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
எனவே இந்தத் தொடரில் இவர்கள் களமிறக்கப்பட்டால் நிச்சயம் பெரிய பங்களிப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.