இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று சவுதாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நைப் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவரும் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை வீழ்த்தி அந்த அணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் அந்த அணி சிறப்பாகவே ஆடியது. அதேபோன்று தொடரின் தொடக்கத்தில் இருந்து சொதப்பிய ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று இறுதி ஓவரில் தோல்வியைத் தழுவியது.
எனவே இன்றையப் போட்டியில் வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கவும், ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யவும் முற்படும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.