சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டம் வென்ற டி.குகேஷ் நேற்று (டிசம்பர் 16) திங்கட்கிழமை சிங்கப்பூரில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2024-இல், தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ், 2023 உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷின் சாதனையை பாராட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024 நடைபெற்ற சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று காலை குகேஷ் விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பில் அவருக்கு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. பின், கொரட்டூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு அவரது உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: 'இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்' - உலக செஸ் சாம்பியன் குகேஷ்
அவர்கள் டி.குகேஷுக்கு மாலை அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் வாழ்த்து தெரிவித்ததுடன், மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடி உற்சாகமாக வரவேற்றனர். குகேஷுக்கு ஆரத்தி எடுத்த குடியிருப்புவாசிகள், அவருடன் செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தின் முகப்பில் வைத்து அவருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வீட்டின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது வீட்டின் வளாகத்தில் உள்ள சிறிய கோயிலில் வெற்றி பெற்ற கோப்பையுடன் சாமி தரிசனம் செய்த பின் குகேஷ் வீட்டிற்குள் சென்றார்.