புதுடெல்லி: பெங்களூரு ஐடி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளராக பணியாற்றி வந்த அதுல் சுபாஷ் (34) கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. சுபாஷ் தற்கொலைக்கு முன்பாக நீண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா, சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது துன்புறுத்தல் குற்றசாட்டை வைத்திருந்தார். மேலும், 24 பக்க தற்கொலை கடிதமும் எழுதியிருந்தார்.
பெங்களூருவை உலுக்கிய வழக்கு
அதன்படி, மனைவி நிகிதா பொய் குற்றசாட்டுகளை வைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்தது மட்டுமின்றி, தனது நான்கு வயது மகனையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், தனது குடும்பத்தார் மீதும் வீண் வழக்குகளை பதிவு செய்து, பெரும் தொகையை கேட்டு மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுபாஷின் குடும்பத்தார் கொடுத்த புகாரின்பேரில், பெங்களூரு சிட்டி போலீசார் நிஷா சிங்கானியா, சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது பிஎன்எஸ் பிரிவு 108, 3(5) இன் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நிகிதா சிங்கானியா ஹரியானாவின் குருகிராமில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோர் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைதாகினர். கடந்த சனிக்கிழமை அவர்கள் பெங்களூரு அழைத்து வரப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
முன்ஜாமீன் மனு
இந்த நிலையில், சுபாஷின் மாமா சுஷில் சிங்கானியா முன்ஜாமீன் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா முன்பு விசாரணைக்கு வந்தது. சுஷில் சிங்கானியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '' சுஷில் சிங்கானியா 69 வயது முதியவர் என்றும், நாள்பட்ட உடல்நலக் குறைபாடு உள்ளவர் என்றும் தெரிவித்தார்.
மேலும், உடல்நல பிரச்சனைகளுடன் உள்ள முதியவர் சுபாஷின் தற்கொலைக்கு எப்படி தூண்டியிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்துடன், தூண்டுதலுக்கும், துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. சுபாஷின் தற்கொலை கடிதத்தின்படி, அவரது தற்கொலைக்கு அதிக பட்ச காரணம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், பொய் வழக்குகளில் சிக்க வைத்திருப்பதும், பெரும் தொகைக்காக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவே எடுத்துக் கொள்ளப்படும்'' என்றும் வாதிடப்பட்டது. மேலும், பிஎன்எஸ் பிரிவு 108, 3(5) இன் கீழ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஒரு குற்றத்தை உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
காவல்துறை தரப்பில், ஏற்கெனவே இந்த வழக்கில் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா, சகோதரர் அனுராக் சிங்கானியா கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறார். இந்த தற்கொலை வழக்கு சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமீன்
இரு தடுப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி, '' மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, மனுதாரர் சுஷில் சிங்கானியா கைதுக்கு முன்கூட்டியே சலுகையைப் பெற தகுதியுடையவர் என்று நீதிமன்றம் கருதுகிறது. அவர் மேல் பதியப்பட்டுள்ள வழக்கில் காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம். 50,000 ரூபாய்க்கான ஜாமீன் பத்திரம் ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கு சம்மந்தமாக எந்த ஒரு நபரிடமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகிர்ந்துகொள்ள கூடாது. முன் அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறவும் கூடாது என்றும் பாஸ்போர்ட் இருந்தால், அதை அவர் சம்பந்தப்பட்ட எஸ்எஸ்பி அல்லது எஸ்பியிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.