சென்னை: போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.76 லட்சம் மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை ஒழிக்க போதைத் தடுப்பு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை நடந்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளைக் குறிவைத்து இதுபோன்ற குற்றச் செயல்கள் நடப்பதை காவல்துறை வட்டாரங்கள் உறுதிசெய்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நபர்களை போலீசார் கைதும் செய்துள்ளனர்.
இதன் காரணமாக, விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மோப்ப நாய்கள் உதவியுடம் விமான நிலைய அலுவலர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உயர்ரக கஞ்சாவை மோப்ப நாய் உதவியுடன் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தீவிர சோதனை:
சென்னை விமான நிலையத்தில் நேற்று (டிசம்பர் 16) சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். போதைப் பொருளை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களையும் சோதனையில் ஈடுபடுத்தியுள்ளனர். அப்போது, நேற்று நள்ளிரவு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்துள்ளது.
அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அவர் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளை மோப்பநாய் மோப்பம் பிடித்துள்ளது. பின்னர், அட்டைப்பெட்டியை பார்த்து மோப்பநாய் தொடர்ந்து குரைக்கவே, அலுவலர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
உயர் ரக கஞ்சா பறிமுதல்:
இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் அந்த பயணியை அவரது உடமைகளுடன் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த அட்டைப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர், அட்டைப் பெட்டிகளில் இருந்த பதப்படுத்தப்பட்ட 7.5 கிலோ உயர் ரக கஞ்சாவை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.76 லட்சம் இருக்கும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, கஞ்சா கடத்திய பயணியை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடத்தல் குருவி:
சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பயணி போதை பொருள் கடத்தல் குருவி என்றும், இவரை இந்த கடத்தலுக்கு அனுப்பியது முக்கியமான போதை பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் என்றும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: திருமண செலவிற்காக குருவியாக மாறிய நபர்கள்.. தங்க கடத்தலில் ஈடுபட்டபோது கைது..!
எனவே, அந்த முக்கிய போதை கடத்தல் கும்பல் நபர் யார் என்று சுங்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இச்சம்பவம் சற்றுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.